புதன், 9 பிப்ரவரி, 2011

களவாணி..

                                     களவாணி 

ஓட்டுக்கோர் ஆயிரம் தந்திடுவார் - பெரும்
       ஊழல்கள்  செய்ததை மீட்டிடுவார்
வீட்டுக்கே எல்லாமும் சேர்த்திடுவார் - மக்கள்
        விதியென்று பதிலொன்று உரைத்திடுவார்
நாட்டுக்கு ஒன்றுமே செய்யமாட்டார் - சுற்றம்
         நலனுக்கே எந்நாளும் உழைத்திடுவார்
நோட்டுக்கே தான்போட்டாய் ஓட்டென்றே - உதவி
         நோக்குவோர் முகத்திடை முனகிடுவார்


ஊருக்கோர் பிள்ளையை ஆடவிட்டு - அட்டை
       உறிஞ்சுவது போலுறிஞ்சிச் சேர்த்துக்கொள்வார் 
நீருக்குப் போராட்டம் என்றுசொல்வார் - அதில் 
        நீதிகிடைக் கும்என்று நம்பவைப்பார்
பாறைக்குள்  ளிருக்குமத் தேரையைப்போல் - அந்தப் 
        பதவிப்போர் வைக்குள்ளே தானிருப்பார்
ஊரையடித் துலையில் போட்டுக்கொண்டு - தானோர் 
       உத்தமபுத் திரனென்று நடித்திடுவார்!


  
           

3 கருத்துகள்:

மாணவன் சொன்னது…

இன்றைய அரசியல்வாதிகளை வரிகளில் சாடியுள்ளீர்கள் அருமை, என்னதான் சொன்னாலும் திருடனாய் பார்த்து திருந்தினால்தான் உண்டு...

Unknown சொன்னது…

ஓட்டு வேட்டை தனையாடி-நம்
ஊரைக் கொள்ளை அடிப்போரை
காட்டிக் கொடுக்கும் களவாணி-என
காட்டினீர் ஐயாமிக நன்றி!
நாட்டில் இன்று அதுதானே-நாளும்
நடந்தது நடப்பது இதுதானே
வாட்டும் வேதனை தீராதா-இந்த
வழக்கம் அணுவும் மாறாதா

கவிதையும் கருத்தும் அருமை!

புலவர் சா இராமாநுசம்

SURYAJEEVA சொன்னது…

திருடனாய் பார்த்து திருந்துவதா மாணவனே, என்ன சொல்லி விட்டீர்கள்? இன்னுமா நீங்க அவனுங்கள நம்புறீங்க..

கோவிந்தராசு சார் கொன்னுட்டீங்க போங்க..