திங்கள், 21 பிப்ரவரி, 2011

பெண்

                   பெண்





ஒரு மது
கால் முளைத்து நடந்துவர

மாதுவானது !!!




சனி, 12 பிப்ரவரி, 2011

(அ)நாகரீகக் காதல்

                                       (அ)நாகரீகக் காதல்

   ஏனோ தெரியவில்லை
   இந்த நாய்களுக்கு மட்டும்
   எல்லா மாதமும் கார்த்திகை !




புதன், 9 பிப்ரவரி, 2011

கரையோரம்

                               கரையோரம்


நதிக்கரையோரம்  
தோன்றிய நாகரீகம்
கடற்கரையோரம்
கட்டுமர நிழலில்
கப்பலேறுகிறது!

இப்படியாக
நதி கடல்சேர்கிறது
நாகரீகம் கரையேறுகிறது!

களவாணி..

                                     களவாணி 

ஓட்டுக்கோர் ஆயிரம் தந்திடுவார் - பெரும்
       ஊழல்கள்  செய்ததை மீட்டிடுவார்
வீட்டுக்கே எல்லாமும் சேர்த்திடுவார் - மக்கள்
        விதியென்று பதிலொன்று உரைத்திடுவார்
நாட்டுக்கு ஒன்றுமே செய்யமாட்டார் - சுற்றம்
         நலனுக்கே எந்நாளும் உழைத்திடுவார்
நோட்டுக்கே தான்போட்டாய் ஓட்டென்றே - உதவி
         நோக்குவோர் முகத்திடை முனகிடுவார்


ஊருக்கோர் பிள்ளையை ஆடவிட்டு - அட்டை
       உறிஞ்சுவது போலுறிஞ்சிச் சேர்த்துக்கொள்வார் 
நீருக்குப் போராட்டம் என்றுசொல்வார் - அதில் 
        நீதிகிடைக் கும்என்று நம்பவைப்பார்
பாறைக்குள்  ளிருக்குமத் தேரையைப்போல் - அந்தப் 
        பதவிப்போர் வைக்குள்ளே தானிருப்பார்
ஊரையடித் துலையில் போட்டுக்கொண்டு - தானோர் 
       உத்தமபுத் திரனென்று நடித்திடுவார்!


  
           

சனி, 5 பிப்ரவரி, 2011

விழிகள்


இரத்தம் வராது...
இதயம் துளைக்கும்
விசித்திர அம்புகள்.!!!!

(எனது வேர்களின் வியர்வை நூலிலிருந்து)

கடற்கரை


இது
அழகு நிறைந்தது மட்டுமல்ல
அவலம் நிறைந்ததும் தான்.....

இங்கே
துள்ளித் துடித்துச் சாவது
மீன்கள் மட்டுமல்ல
எங்கள்
மீனவர்களும்!

கண்ணுக்கெட்டும் தூரம்வரை
நாரைகளைக் காணோம்
கழுகுகளின் நடமாட்டம்..

பல்லாயிரம் பிணங்களைச்
சுமந்துகொண்டிருக்கும்
மணல் மேடுகளாய்.......

கடற்கரை!

(எனது வேர்களின் வியர்வை நூலிலிருந்து)

தாய்மை!


இங்கு 
ஆணுக்கு மட்டுமே 
அடுத்த பிறவி!


மகளிருக்கு 
மறு பிறப்பும் 
மனிதப் பிறப்பே!


பெண்ணாக ஒரு பிறப்பு
தாயாக மறுபிறப்பு!


உறுப்பு தானங்களையே
உயர்வாகப் பேசும் உலகில்
இதோ!
உயிர்ப் பணயம் வைத்து
உயிர் தருகிறாள் 
ஒரு தாய்!

(எனது வேர்களின் வியர்வை நூலிலிருந்து)