வெள்ளி, 9 செப்டம்பர், 2011

ஏணி, தோனி

                                    ஏணி, தோணி 
கைபிடித்து ,
 காலூன்றி ,
 மெல்ல மெல்ல ஏறி 
ஏற்றம் கண்டபின் ...

ஏன் நீ ?

என 
எட்டி உதைக்க
காப்பகங்களில்
கண்ணீருடன் கதியற்றுக் கிடக்கின்றன ....


சில அம்மா ஏணிகளும்,
பல அப்பா தோணிகளும்

மரப்பாச்சிப் பொம்மைகள்

                     மரப்பாச்சிப் பொம்மைகள் 
இனப்போர்ச் சுனாமியில் 
பிள்ளைகள் இறந்துவிட ...
அவலங்களோடு......
கரையொதுங்கிக் கிடக்கும்                     

மரப்பாச்சிப்     பொம்மைகளாய்    

வேலியோரம் .....

ஈழ மக்கள் !                                                                                                   

புதன், 22 ஜூன், 2011

தமிழகப் பள்ளிக் கல்வி

                      தமிழகப் பள்ளிக் கல்வி


காமராஜருக்குப் பின் எந்த அரசும் பள்ளிக்கூடம் கட்டவில்லை. பொதுமக்களில் ஒருவரும் அது பற்றிக் கேள்வி எழுபவும் இல்லை.
வந்த அரசுகளும் மக்களும் தனியார் பள்ளிகளுக்கு ஆதரவு தந்தனர்.
அரசுப் பள்ளியில் படித்து நல்ல மதிப்பெண் பெற்ற மாணவரை அரசே
பணம் கொடுத்து தனியார் பள்ளியில் சேர்த்து விடுவதாகவும் சொன்ன
கேவலமும் இங்கே நடந்தேறியது.


    டாடி மம்மி எனத் தன் பிள்ளைகள் அழைக்கவேண்டுமென நினைத்தனர்
பெற்றோர். இதனால் தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் அதிகமானது. வசதியுள்ளோர் நல்லபள்ளிகள் என பணம் அதிகம் பெரும் பள்ளிகளை நோக்கி ஓட அதை அனைவரும் பின்தொடர்ந்தனர்.

    சமச் சீர்க் கல்வி பற்றிய சிந்தனை நாற்பது ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் வந்தது.
அது ஒரு வழியாக நிறைவேறும் வேளை ஜெயலலிதா அரசு தடைபோடுகிறது.

     சமசீர் கல்வி வேண்டுமென்றும், தனியார் பள்ளிகள்
அதிக்கட்டணம் வசூலிக்கிறது என்றும்  ஆர்ப்பாட்டம் செய்யும்
 மேதாவிகளே !. முன்பு இனித்தது இப்போது கசக்குகிறதா?

அரசாங்கத்திடம் அருசுப் பள்ளிகள் ஏன்கட்டவில்ல்லை? என்று
கேட்காமல் , தனியார் பள்ளிக் கட்டணத்தைக் குறைக்கச்
 சொல்லிப் போராடும் முட்டாள்களே! உங்களை என்னசெய்ய?
சே!!!!

  

ஞாயிறு, 22 மே, 2011

நெருடல்

                         நெருடல்               

ஞாலம் எங்கும் அடிமை வேடமா ?
     நிமிரா திருக்க நாங்கள் ஓடமா?
கால காலமாய் இனநிற பேதமா?
      கனல்தமிழ் வீரம் தீவிர வாதமா?
சொந்த மண்ணிலே அனாதைக் கோலமா?
        சோகம் இன்னுமே அங்கே நீளுமா?
வெந்த புண்ணிலே வேல்கள் பாயுமா?
        விடுதலை பெற்றே கவலை மாயுமா?


பாலம் கடல்வழி இராமன் போட்டதாய்
       பகுத்தறி  வின்றிச் சேதுவைத் தடுப்பதா?
கூளம் தின்னும் மாடுகள் போலவே 
       கூட்டங்  கூட்டமாய் பழங்கதை பேசியே 
ஓலம் எல்லாம் கேட்டும் செவிடராய் 
       உணர்சிகள் அற்று உறங்கிக் கிடப்பதா?
ஈழம் வாழ்ந்திட ஏதும் செய்திடா 
       ஈனப் பிறப்பால் நெருடல் இல்லையோ?                

திங்கள், 21 பிப்ரவரி, 2011

பெண்

                   பெண்





ஒரு மது
கால் முளைத்து நடந்துவர

மாதுவானது !!!




சனி, 12 பிப்ரவரி, 2011

(அ)நாகரீகக் காதல்

                                       (அ)நாகரீகக் காதல்

   ஏனோ தெரியவில்லை
   இந்த நாய்களுக்கு மட்டும்
   எல்லா மாதமும் கார்த்திகை !




புதன், 9 பிப்ரவரி, 2011

கரையோரம்

                               கரையோரம்


நதிக்கரையோரம்  
தோன்றிய நாகரீகம்
கடற்கரையோரம்
கட்டுமர நிழலில்
கப்பலேறுகிறது!

இப்படியாக
நதி கடல்சேர்கிறது
நாகரீகம் கரையேறுகிறது!

களவாணி..

                                     களவாணி 

ஓட்டுக்கோர் ஆயிரம் தந்திடுவார் - பெரும்
       ஊழல்கள்  செய்ததை மீட்டிடுவார்
வீட்டுக்கே எல்லாமும் சேர்த்திடுவார் - மக்கள்
        விதியென்று பதிலொன்று உரைத்திடுவார்
நாட்டுக்கு ஒன்றுமே செய்யமாட்டார் - சுற்றம்
         நலனுக்கே எந்நாளும் உழைத்திடுவார்
நோட்டுக்கே தான்போட்டாய் ஓட்டென்றே - உதவி
         நோக்குவோர் முகத்திடை முனகிடுவார்


ஊருக்கோர் பிள்ளையை ஆடவிட்டு - அட்டை
       உறிஞ்சுவது போலுறிஞ்சிச் சேர்த்துக்கொள்வார் 
நீருக்குப் போராட்டம் என்றுசொல்வார் - அதில் 
        நீதிகிடைக் கும்என்று நம்பவைப்பார்
பாறைக்குள்  ளிருக்குமத் தேரையைப்போல் - அந்தப் 
        பதவிப்போர் வைக்குள்ளே தானிருப்பார்
ஊரையடித் துலையில் போட்டுக்கொண்டு - தானோர் 
       உத்தமபுத் திரனென்று நடித்திடுவார்!


  
           

சனி, 5 பிப்ரவரி, 2011

விழிகள்


இரத்தம் வராது...
இதயம் துளைக்கும்
விசித்திர அம்புகள்.!!!!

(எனது வேர்களின் வியர்வை நூலிலிருந்து)

கடற்கரை


இது
அழகு நிறைந்தது மட்டுமல்ல
அவலம் நிறைந்ததும் தான்.....

இங்கே
துள்ளித் துடித்துச் சாவது
மீன்கள் மட்டுமல்ல
எங்கள்
மீனவர்களும்!

கண்ணுக்கெட்டும் தூரம்வரை
நாரைகளைக் காணோம்
கழுகுகளின் நடமாட்டம்..

பல்லாயிரம் பிணங்களைச்
சுமந்துகொண்டிருக்கும்
மணல் மேடுகளாய்.......

கடற்கரை!

(எனது வேர்களின் வியர்வை நூலிலிருந்து)

தாய்மை!


இங்கு 
ஆணுக்கு மட்டுமே 
அடுத்த பிறவி!


மகளிருக்கு 
மறு பிறப்பும் 
மனிதப் பிறப்பே!


பெண்ணாக ஒரு பிறப்பு
தாயாக மறுபிறப்பு!


உறுப்பு தானங்களையே
உயர்வாகப் பேசும் உலகில்
இதோ!
உயிர்ப் பணயம் வைத்து
உயிர் தருகிறாள் 
ஒரு தாய்!

(எனது வேர்களின் வியர்வை நூலிலிருந்து)