களவாணி
ஓட்டுக்கோர் ஆயிரம் தந்திடுவார் - பெரும்
ஊழல்கள் செய்ததை மீட்டிடுவார்
வீட்டுக்கே எல்லாமும் சேர்த்திடுவார் - மக்கள்
விதியென்று பதிலொன்று உரைத்திடுவார்
நாட்டுக்கு ஒன்றுமே செய்யமாட்டார் - சுற்றம்
நலனுக்கே எந்நாளும் உழைத்திடுவார்
நோட்டுக்கே தான்போட்டாய் ஓட்டென்றே - உதவி
நோக்குவோர் முகத்திடை முனகிடுவார்
ஊருக்கோர் பிள்ளையை ஆடவிட்டு - அட்டை
உறிஞ்சுவது போலுறிஞ்சிச் சேர்த்துக்கொள்வார்
நீருக்குப் போராட்டம் என்றுசொல்வார் - அதில்
நீதிகிடைக் கும்என்று நம்பவைப்பார்
பாறைக்குள் ளிருக்குமத் தேரையைப்போல் - அந்தப்
பதவிப்போர் வைக்குள்ளே தானிருப்பார்
ஊரையடித் துலையில் போட்டுக்கொண்டு - தானோர்
உத்தமபுத் திரனென்று நடித்திடுவார்!